Monday, January 4, 2010

இயலாமை


நான் விரும்புவது எப்போதும் நடப்பதேயில்லை.
நான் வெறுத்தாலும் சில நாட்கள்,சில வேளைகள்
வந்துகொண்டேதான் இருக்கின்றன.
அமைதியாக இருக்க நினைக்கையில்தான்
பல எண்ணங்கள் உள்ளே நுழைகின்றன.
என் அனுமதியின்றி படுக்கை அறையில்
நுழையும் கொசுக்களைப் போல.
வெறுக்கும் போது என்னை
அலட்சியப் படுத்தி விட்டு செல்கின்றன.

நான் விரும்பும் அந்தச் சித்திரப் பாவை போல
தேடும்போது கிடைப்பதில்லை
என்ற ஒற்றைக் காரணத்தால் தான்
கடவுளைக் காணக் கூட ஆர்வம் மிகுவதில்லை.
எங்கோ எப்போதோ ஒரு அலுப்பான பயணத்தின் போது
எண்ணங்கள் ஊற்றெடுக்கின்றன.
எழுதுவதற்கு வாய்ப்பில்லை
என அறிந்ததாலோ என்னவோ?

இப்போதும் கூட இப்படத்திற்கு
எழுத வேண்டி எண்ணங்களைத் தூண்டுகிறேன்.
குனிந்து நிற்கும் அக் குழந்தைப் போல
கவிழ்ந்து நிற்கின்றன என் எண்ணங்கள் .
என்னைப் போல பேசாமல்
என்ன எண்ணும் அக்குழந்தை
என சிந்திக்கும் வேளையில்,
அக் குழந்தை போல
குனிந்து நிற்கிறாய் என்று சொல்கிறது
நான் விரும்பாத அதே எண்ணம்.

டிஸ்கி 1:
நன்றி ஹேமா.
நான் எழுதுவதே மிக அரிது. உங்களால்தான் இதைக் கூட யோசித்தேன்.

Monday, December 14, 2009

கண்ணனைக் காணும் கண்கள்.
’பெண்கள் இருக்குமிடம்தான் கண்ணன் இருக்குமிடம்’ அவர்களோடுதான் பொழுதுக்கும் விளையாட்டு,அவர்களிடம் குறும்பு செய்து கொண்டிருப்பான். வாருங்கள் நாமும் சற்று எட்டிப் பார்ப்போம்.

அதோ, அங்கிருக்கும் தொட்டாசிணுங்கியின் முள்பட்டதுக் கூடத்தெரியாமல் பெண்கள் கூட்டத்தை நோக்கி ஓடுவது தெரிகிறதா?, ஆ...என்னமோ சொல்லுகிறாரே, அட!!! காதைக் கொஞ்சம் தீட்டுங்களேன்

//தொட்டு - உன்னைத்
துன்புறுத்தி
இன்புற்றவர்கள்
இங்கு ஏராளம் .//
எனச் சொல்லிக் கொண்டே போகிறார் பாருங்கள். அதுதான் அவரது தனித்துவமே.

ம்ம்ம்ம்.. கருணாகரசு கேளுங்க. எதைப் பத்தி சொல்லுறாரா?, ’நிர்வாணமாய் நீ’ அப்பிடின்னு தொட்டாசிணுங்கியப் பத்திச் சொல்லுறார்ங்க.
செடி என்னைக்கு சட்டப் போட்டிருக்குன்னு ஏடா கூடமா கேக்காதீங்க ஜமால், அங்க பாருங்க கலா என்ன சொல்லுறாங்கன்னு

//இந்தக் கண்கள் இருக்கே... அப்பப்பா...
செடி,பூக்களுக்குக் கூடத் துணி போட்டுத்தான்
மூடவேண்டும்//

பாவம் இவங்க, செடியைப் பத்திதான் சொல்லுறார்ன்னு நினைச்சிட்டாங்க.

ஹேமா தான் சரியாச் சொல்லுறாங்க அதைக் கேளுங்க கருணாகரசு.

//யாரையாச்சும் தொட்டுச் சிணுங்க வச்சு கவிதையா எழுதினாச் சரின்னு இருக்கு உங்களுக்கு.//

அந்தா, மஞ்சத் தாவணில இருக்கற பொண்ணுக்கிட்ட ஏதோ சொல்லுறாரு கேளுங்க..

//தண்ணீர் பாம்பை போல்
அவ்வபோது
நம்'முள்'ளிருந்து
தலை தூக்கிப் பார்க்கும்
காதலை
என்ன செய்யலாம்...?//

அட நட்புதான்பா. கவிதை இன்பத்துக்காக அப்பிடி உதார் விடுறான்னு நினைச்சா, கலகலப்ரியா எப்பிடி உசுப்பேத்தாறாங்க பாருங்க.

//அண்ணே... பயப்டாதீங்கண்ணே நாம எல்லாம் எதுக்கிருக்கோம்...//

அட, நீங்க ஒன்னும் கேக்காதீங்க ஜமால், நான் கேட்டேன் அது ‘moral support only'யாம்.

இப்பிடிச் சொல்லிச் சொல்லியே அந்த ஆளூ முதுவ ரணகளமா ஆக்கிட்டாய்ங்க.

//இன்னுமா அடங்க மாட்டேங்கிற... பெருசு....அளப்பறையை குறச்சிக்கப்பு... இல்ல ஆப்பு!!!//.

ஏன் கருணாகரசு இப்பிடித் திட்டுறீங்க, இப்ப கண்ணன் என்ன சொல்லுறாரு பாருங்க

//பொது இடத்துல கூடவா இப்படி பேசறது//

[ யேய்ய்.... இதனால் சகலருக்கு தெரிவிப்பது என்னவென்றால்....கண்ணன் ஆண்களிடமும் பேசுவாரு......]

அங்கப் பாருங்க கலாவை. கண்ணு மூடிகிட்டாங்க என்னன்னுக் கேட்டா,

//இன்னும் எங்களுக்கு காதல்
வயது வரவில்லை .இன்னும் சின்னஞ்சிறுசுகள்.//

இதையே சொல்லிக் கிட்டு,நீங்களும் கண்ண மூடுங்க.

ஜமால், கண்ணத் தொறங்க, அங்கப் பாருங்க, ம்ம்ம்ம்ம்ம்....பதறாதீங்க, சும்மா அப்பிடித்தான் அழுவாரு, காரணம் கேட்டதுக்கு சொல்லுறாரு

//ஓய்ந்து
பாலுக்காக வீரிட்டு அழும்
பச்சிளங் குழந்தையைப் போல்
உன்
காதலுக்காக
வீரிட்டபடி...//

இவரு காதலுக்காக அழுறாரு, அந்தப் புள்ளயோட,பொண்ணு பாலுக்காக அழுவுது. கல்யாணமான பொண்ணுக்கிட்ட எப்படிங்க கேப்பாரா, என்ன ஜமால், அப்பாவியா இருக்கீங்க, அவரையே கேளுங்க. அங்கப் பாருங்க எவ்ளோ மெதுவா சொல்லுறாரு.உங்கக்கிட்ட இல்ல, அந்தப் புள்ளைக்கிட்ட.

//அதற்காகவேனும்
தா...டீ..!
உன்னிடமுள்ள
மீதி காதலை...!//

அவருக்கிட்ட எப்பவும் இருக்கிறது என்ன? கருணாகரசு இப்படி கேக்குறீங்க.அவரே ஒருவாட்டி சொன்னாரு

//எப்போதும் உடனிருப்பது : இதுவரை உயிர்!//

அவரிடம் இல்லாதது என்னன்னு எனக்குத் தெரியும். அது மானம். மன்னிக்க. எழுத்துப் பிழை. 'மனம்' அப்பிடின்னு சொல்ல வந்தேன். அதைப் பொண்ணுங்கக்கிட்ட குடுத்துட்டாரு.

அப்படி இல்லங்க ,இதையெல்லாம் விடச் சொல்லி ஒருதடவை நான் சொல்லிப்பார்த்தேன். அதுக்கு என்ன சொன்னாரு தெரியுமா?

//இத்தனைக்காலம் பழகிப்போனதை
இனி மாற்றுவதெப்படி
என வினவும்
மனம் முடமாகிப் போன
மானங்கெட்ட இளைஞனா நீ?//

சரி கலா என்ன சொல்லுறாங்க தெரியுமா

//உங்களுக்கு மட்டுமா!! இவ்வளவா!!!
நம்பமுடியுமா??அதிசயமான மனிதரப்பா!!!!
இரண்டா?மூன்றா?? அதுதான்...இதயம்.
ஆளுக்கொன்று கொடுக்கிறீர்களே//

ஆமா... நாம கண்ணனைப் பற்றித்தானே பேசுறோம் - கருணாகரசு

இது கோபியருடன் சுற்றியலையும் கண்ணன். கீதை சொல்லும் கண்ணனப் பார்க்கணுமா? என்ன ஜமால் இப்படிக் கேக்குறாரு, ஹேமாவைக் மொதல்ல கேளுங்க யாரு இவருன்னு

// தன் காதலைத தானே சுமக்கும் அருமையான் காதலன் நீங்க//

அட கண்ணனைக் காணும் கண்கள் அப்பிடின்னு சொல்லிப்புட்டு....

’என்ன தவம் செய்தனை’[ராகம்: காப்பி , தாளம்: ஆதி,இயற்றியவர்:பாபநாசம் சிவன்] நாம் பார்த்தது யசோதாவைப் பற்றியல்ல, அவரது வளர்ப்பு மகன் கண்ணனைப் பற்றி, அவனது லீலைகளைப் பற்றி...

மண்ணைத் தின்றான் என பலராமனும், மற்றவர்களும் கூற யசோதா கண்ணனை வாயைப் பார்க்க வாயை திறக்கச் சொன்னாள்.அதில் அவளுக்கு அண்ட சராசரங்களும், பலப்பல கண்டங்களும் தெரிந்தன. அதைக் கண்ணன் உடனே மறக்கச் செய்தான். அதனால்தான் பல ஞானிகளும்,முனிவர்களும் ’கிருஷ்ணா நீ பேகனே பாரோ’ [ராகம்: யமுனா கல்யாணி,தாளம்: மிஸ்ரசபு, இயற்றியவர்:வியாசராயர்] கெஞ்சுகின்றனர். நீங்களும் கெஞ்ச வேண்டுமானால்,கோபியர் நடுவேக் [ஆம்பளைக்கு ‘நோ எண்ட்ரி’]காணமுடியும்.

டிஸ்கி 1:
கட்டுரையில் குறிப்பிட்ட செய்திகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் உண்மையானவையே. இது கற்பனை அன்று. உண்மை....உண்மை...முற்றிலும் உண்மை.

டிஸ்கி 2:
எழுதத் தூண்டிய ஜமாலுக்கு என் நன்றி.

டிஸ்கி 3:
ஆதாரம்: மனவிழி யில் பதிவுகளாகவும், உரையாடல் அவர்கள் பின்னூட்டங்களாகவும்..

Saturday, December 5, 2009

கவிஞரைக் காணா உள்ளம்.....


காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு

பெயர் : கருணாகரசு
வயது : 35
முகவரி : அன்புடன் நான்

அவரின் பெயரையும்,கவிதையைத் தவிர ஏதும் அறியேன்;தாயையும் அன்பையும் மட்டும் அறிந்த குழந்தையைப் போல்.

//மொழிக்கும்
விழிக்கும்
வித்தியாசம் அதிகமில்லை !
இரண்டும்...
பேசும் இயல்புடையவை .//

எந்தப் பேச்சு புரிந்த்ததோ?

//உன்னையே வேண்டிய
உயிரின் இதயத்தை
வேரோடு பிடுங்கிச் செல்கிறாய் !//


எனக் கதறினார் ஒருமுறை,அதை நானறிவேன். இதயம் பிடுங்கியவர் திரும்ப அளித்து,அவருடையதையும் கொடுத்து,கூட்டிச் சென்று,பொறுப்பளித்து எனதன்புப் பாலத்தை உடைத்திருப்பாரோ?

//என்னை வதைத்து
எங்கோ நீ செல்வது
பெண்மையே உனக்கு சிறப்பா ?//

கதறினார் அன்று.நம்மை உதறினார் இன்று.

மலேசியாவில் 2005_ல் நடந்தேறிய முதலாவது உலகத் தமிழ்மறை ஆராய்ச்சி மாநாட்டி, உலக அளவில் வள்ளுவம் பற்றிய புதுக்கவிதைக்கான ஆறுதல் பறிசை வென்ற கவிதையில்

//பழமை நட்பையும்
படைப்பில் அடக்கிய காவியம்//

என்றாயே,வார்த்தைகளை வளைத்தாய் அன்று, உடைந்த உள்ளத்தை அறிவாயா இன்று.

//சொந்த உழைப்பினில்
சிந்தும் வியர்வையில்
புதைந்து இருக்குது வெற்றி !-அதை
புதையலென எடு வெட்டி !!//

புதையலை வெட்டி எடுக்கச் சென்றிருப்பாயோ? சொல்லியிருந்தால் நானும் வருவேனே, புதையலை பங்கு போட அல்ல, மாறாக உழைப்பின் உன்னதத்தை உணர.


சத்ரியனுக்கு(பிறந்த நாளுக்காக) நான் அனுப்பிய கேக்-கை சுவைத்த பின்

// முட்டை குறைவு ( அவருக்கு* சொரணை தேவை ..... கொழுப்பு தேவை இல்லை என்ற அர்த்தத்தில் )// * சத்ரியன்

என்றாயே, முட்டை எடுத்து வருமுன், எனக்கே முட்டைப் போட்டாயோ?

//வல்லிய நம்பிக்கையோடு
வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் .
பொழுது ஒருநாள்
புலரும்மென்றும் _ அப்போ
எங்களின் ...
மனம் என்ற ...
மலர்கள் மீண்டும் ...
மலருமென்றும்!.
//

இதை சொன்னதும் நீதான். இந்தப் பூக்கள் மலரும் நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை.


பின் குறிப்பு:

ஹேமா, கலா, சத்ரியன்(எங்காவது பெண்கள் கூட்டம் இருக்குமிடத்தில் இருப்பார்,கவிதைக்கான கருவைத் தேடி), ஜமால்(வேலைக் கிடைக்க உதவுவது போல்,இதற்கும் கொஞ்சம்...) ஆகியோருக்கு....
நண்பரைக் கண்டுபிடிக்க உதவ வேண்டுகிறேன். தொலைக்காட்சி,நாளிதழ், ‘இண்டர்போல்’ என எந்தக் கதவையாவதுத் தட்டுங்கள்.அங்கேப் போய் கேளுங்கள். ஏனெனில்
”தட்டுங்கள் திறக்கப்ப்டும்;கேளுங்கள் கொடுக்கப்படும்”
நான் நம்புகிறேன்।

Thursday, November 12, 2009

சில நாட்கள் தேவை.....

அன்புள்ள வலை நண்பர்களே...
வெகு நாட்களாக நான் இந்தப் பக்கம் வருவதை நிறுத்தி விட்டேன். அதற்கு காரணம் உண்டு.
அக்டோபர் 12ந் தேதி மாலை 4:30 மணியளவில் எனது அலைபேசி ஒலித்தது. அப்போது இந்திய நேரம் அதிகாலை 3:00, குழப்பத்துடன் எடுத்தேன்.பேசியது எனது தந்தை. பேரிடியாக ஒரு தகவல் தந்தார். எனது சகோதரன் எங்களை விட்டுப் பிரிந்ததாகச் சொன்ன போது எனக்கு ஒன்றும் புரியவில்லை.

எனது சகோதரர்(வயது 40), சிங்கப்பூரில் உள்ள தேசியப் புற்று நோய் கழகத்தில், விஞ்ஞானியாக பணியாற்றினார்.எதைப்பற்றி ஆராய்ச்சி செய்தாரோ அதே புற்று நோயால் உலகையும் எங்களையும் விட்டுப் பிரிந்தார்.எனவே நான் இந்தியாச் சென்று திரும்பியிருக்கிறேன்.இன்னும் அதிர்ச்சி மீளாமல் இருக்கிறேன்.

என்னைக் காணாமல் தேடிய நல் உள்ளங்களுக்கு(குறிப்பாக தோழர் கருணாகரசு அவர்களுக்கு) நன்றி.மீண்டு(ம்) வருவேன்.முன் போல் தொடருவேன் இன்னும் சில நாட்களில்.....

Friday, October 2, 2009

தொழில் சுத்தம்....தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் எடுக்கப்பட்டது...

Thursday, September 3, 2009

ஔவை – சுட்ட பழம்...

‘அரிதரிது மானிடராதல் அரிது மானிடராயினும் கூன்குருடுசெவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும்நயத்தலரிது’

- இது,’அரியது எது? என்ற முருகனின் கேள்விக்கு ஔவையின் பதில். தகடூரை ஆண்ட அதியமான் ஔவைக்கு நெல்லிகனி கொடுத்தது,ஆத்திசூடி இவற்றின் மூலம் நமக்கு அறிமுகமானவர் இவர்.

ஔவையார் என்ற பெயரில் பல பெண்பாற் புலவர்கள் இருந்தனர் என்றும்,பெண்பாற் புலவர்களை இந்த பெயரில் அழைததனர் என்றும் பல்வேறு செய்திகள் உள்ளன. மிக எளிமையாகவும்,சுருங்கவும் சொல்லுவதில் வல்லவர். வள்ளுவர் எழுதிய குறளை விடவும் சுருங்க சொன்னவர்.
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு”
இதை “எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்” என்று சுருக்கினார்.

ஔவையார் சிறுமியாய் இருக்கும்பொழுது ஒரு புலவர் அவரது தந்தையாரைக் காண வருவார். அவர் எழுதிய கவிதை ஒன்று,

நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா -

என்று பாதியில் நின்றுவிட்டதென்று சொல்ல அப்போது அங்கு வந்த சிறுமி ஔவை

நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.

என்று மீதிப்பாடலைக் கூறினார்.

பொருள் : நாம் ஒருவருக்கு உதவி செய்கையில் அதன் கைம்மாறான பலன் நமக்கு என்று கிடைக்கும் என்று எண்ணிச் செய்யக்கூடாது. தென்னை மரம் அதன் வேரில் ஊற்றும் தண்ணீரை உண்டு வளர்ந்து, இளநீராகவும் தேங்காய்களாகவும் தன் தலையில் உருவாக்கி நமக்குத் தருவது போல் நாம் பிறர்க்குக் கைம்மாறு கருதாமல் உதவினால் நமக்கு உதவி தேவைப்படுகையில் அது தானாகவே கிடைக்கும்.

ஔவை ஒரு சமயம் குலோத்துங்கன் அரசவைக்கு வருகை தந்தபொழுது ,ஆணாதிக்கம் மிக்க அந்த காலத்தில், கம்பர் அவரைப் பார்த்து ஔவையாருக்கும் ஆரைக்கீரைக்கும் சிலேடையாக தரக்குறைவாக(டீ என) விமர்சிக்க,

“ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ”

என்று கூற ஔவையார் கோபங்கொண்டு

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டிற் பெரியம்மை வாகனமே முட்டமேற்
கூரையில்லா விடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது

என்று பதில் வந்தது ஔவையிடமிருந்து.

எட்டு (8) என்ற எண்ணுக்குத் தமிழில் “அ”, கால் (1/4) என்ற எண்ணுக்கு “வ”, அதனால் எட்டேகால் லட்சணமே என்றால் “அவலட்சணமே” என்றாகிறது. எமன்ஏறும் பரி என்றால் எருமை.பெரியம்மை என்றால் மஹாலக்ஷ்மியின் அக்காளான மூதேவி. கூரையில்லா வீடென்றால் குட்டிச்சுவர். குலராமன் தூதுவன் அனுமன் ஒரு குரங்கு. கம்பர் ராமாயணத்தை எழுதியதால் அவர் ஒரு வகையில் ரராமனின் தூதுவனாகிறார். நீ சொன்னது ஆரைக்கீரை எனும் பொருள்பட அடீ என்று சொன்னதற்கு பதிலுரையாக “அடா”வைச் சேர்த்து ஆரையடா என்றார்.

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”
“ஆலயம் தொழுவது சாலவும் நன்று”
- இவை நாம் சிறுவயதில் படித்தவை.கொன்றை வேந்தன் என்னும் நூலில் உள்ள பாடல்கள் இவை.

“நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை”
- இடு மூதுரையில் உள்ள பாடல்.
பெரும்பாலான பாடல்களுக்கு விளக்கவுரை தேவையில்லை என்பது இவரது சிறப்பு.