Thursday, September 3, 2009

ஔவை – சுட்ட பழம்...

‘அரிதரிது மானிடராதல் அரிது மானிடராயினும் கூன்குருடுசெவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும்நயத்தலரிது’

- இது,’அரியது எது? என்ற முருகனின் கேள்விக்கு ஔவையின் பதில். தகடூரை ஆண்ட அதியமான் ஔவைக்கு நெல்லிகனி கொடுத்தது,ஆத்திசூடி இவற்றின் மூலம் நமக்கு அறிமுகமானவர் இவர்.

ஔவையார் என்ற பெயரில் பல பெண்பாற் புலவர்கள் இருந்தனர் என்றும்,பெண்பாற் புலவர்களை இந்த பெயரில் அழைததனர் என்றும் பல்வேறு செய்திகள் உள்ளன. மிக எளிமையாகவும்,சுருங்கவும் சொல்லுவதில் வல்லவர். வள்ளுவர் எழுதிய குறளை விடவும் சுருங்க சொன்னவர்.
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு”
இதை “எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்” என்று சுருக்கினார்.

ஔவையார் சிறுமியாய் இருக்கும்பொழுது ஒரு புலவர் அவரது தந்தையாரைக் காண வருவார். அவர் எழுதிய கவிதை ஒன்று,

நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா -

என்று பாதியில் நின்றுவிட்டதென்று சொல்ல அப்போது அங்கு வந்த சிறுமி ஔவை

நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.

என்று மீதிப்பாடலைக் கூறினார்.

பொருள் : நாம் ஒருவருக்கு உதவி செய்கையில் அதன் கைம்மாறான பலன் நமக்கு என்று கிடைக்கும் என்று எண்ணிச் செய்யக்கூடாது. தென்னை மரம் அதன் வேரில் ஊற்றும் தண்ணீரை உண்டு வளர்ந்து, இளநீராகவும் தேங்காய்களாகவும் தன் தலையில் உருவாக்கி நமக்குத் தருவது போல் நாம் பிறர்க்குக் கைம்மாறு கருதாமல் உதவினால் நமக்கு உதவி தேவைப்படுகையில் அது தானாகவே கிடைக்கும்.

ஔவை ஒரு சமயம் குலோத்துங்கன் அரசவைக்கு வருகை தந்தபொழுது ,ஆணாதிக்கம் மிக்க அந்த காலத்தில், கம்பர் அவரைப் பார்த்து ஔவையாருக்கும் ஆரைக்கீரைக்கும் சிலேடையாக தரக்குறைவாக(டீ என) விமர்சிக்க,

“ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ”

என்று கூற ஔவையார் கோபங்கொண்டு

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டிற் பெரியம்மை வாகனமே முட்டமேற்
கூரையில்லா விடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது

என்று பதில் வந்தது ஔவையிடமிருந்து.

எட்டு (8) என்ற எண்ணுக்குத் தமிழில் “அ”, கால் (1/4) என்ற எண்ணுக்கு “வ”, அதனால் எட்டேகால் லட்சணமே என்றால் “அவலட்சணமே” என்றாகிறது. எமன்ஏறும் பரி என்றால் எருமை.பெரியம்மை என்றால் மஹாலக்ஷ்மியின் அக்காளான மூதேவி. கூரையில்லா வீடென்றால் குட்டிச்சுவர். குலராமன் தூதுவன் அனுமன் ஒரு குரங்கு. கம்பர் ராமாயணத்தை எழுதியதால் அவர் ஒரு வகையில் ரராமனின் தூதுவனாகிறார். நீ சொன்னது ஆரைக்கீரை எனும் பொருள்பட அடீ என்று சொன்னதற்கு பதிலுரையாக “அடா”வைச் சேர்த்து ஆரையடா என்றார்.

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”
“ஆலயம் தொழுவது சாலவும் நன்று”
- இவை நாம் சிறுவயதில் படித்தவை.கொன்றை வேந்தன் என்னும் நூலில் உள்ள பாடல்கள் இவை.

“நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை”
- இடு மூதுரையில் உள்ள பாடல்.
பெரும்பாலான பாடல்களுக்கு விளக்கவுரை தேவையில்லை என்பது இவரது சிறப்பு.

5 comments:

நட்புடன் ஜமால் said...

நல்லாரு ஒருவர் உளரேல் - நான் அடிக்கடி இதனை மேற்கோள் காட்டுவேன் நண்பர்களிடம் பேசுகையில்.

நல்ல அலசல் நண்பரே

ஹேமா said...

பெருமாள் தொடர் பதிவு போட்டாச்சு.
சொல்லத்தான் களைச்சுப் போய் வந்தேன்.

இங்கு ஒளவையின் சிலேடைப் பேச்சு அருமை.
8 என்னும் அட்சரத்திட்கு ஒளவயின் பொருள் அப்பாடி...எப்படிப்பட்டவர்கள் எல்லாம் வாழ்ந்த தமிழுக்குள் நாங்கள் வாழ்கிறோம்.
பெருமையாய் இருக்கு.

சத்ரியன் said...

அரங்க பெருமாள்,

தமிழ் அருவி நீங்கள்! எவ்வளவு இருக்கு உள்ளுக்குள்! அப்பப்பா...! எழுதுங்க. எழுதிக்கிட்டே இருங்க. இன்றைய இளையத் தலைமுறைக்கு ... எல்லாம் தேவைப்படுகிறது...!

ஆச்சர்யப்பட்டுட்டேன். நம் மூதாதையர்களின் அறிவைப்படித்து!

இரசிகை said...

intha ettekaal lakshaname...kavithai enga appaththa enakku solle irukkaanga:)

goma said...

அருமையான பதிவு