Thursday, August 20, 2009

கடவுளைத் தேடி... பயணம் - 1கேட்பதற்கு சற்றே வியப்பாக இருந்தாலும், 'தம் முயற்சி மெய் வருத்த கூலி தரும்' எனற பொய்யாமொழிப் புலவரின் நம்பிக்கைத் தரும் வார்த்தைகளை நம்புவோம்.
மகான்களும்,முனிவர்களும் செய்த முயற்சி இது.இந்தப் பாதையில் சற்று நடந்து விட்டு வரும் ஒரு ஆசை. இது ஏற்கனவே முயற்சித்தவர்களின் பாதை. இதுப் புதுப்பாதை அல்ல. அவர்களின் முயற்சி,பாடல்கள் என சிலவற்றை அலசிப் பார்க்கும் தொடர்.சிததர்கள்,யோகிகள்,புலவர்கள் முனிவர்கள் இவர்களின் பாதையைத் தெரிந்து கொள்ளும் முயற்சி.
யாரையும்,எந்த நம்பிக்கையையும் தகர்க்கும் முயற்சி அல்ல.கீதை,பைபிள்,குரான் ஏன் புத்தனையும் கேட்டுப் பார்ப்போம்.அவர்களின் வரலாற்றை ஆராயாமல்,அவர்களின் அறவுரைகளை மட்டும் தெரிந்து கொள்வோம்.நம் பாதை பல நேரங்களில் ஆத்திகப் பாதை,சில நேரங்களில் நாத்திகப் பாதை என மாறி மாறி வரக்கூடும்.அதற்கு காரணம் அந்த மகான்களே அன்றி,வேறு யாரும் காரணமல்ல.

முதலில் பார்ப்பது சிவவாக்கியார் எனும் சித்தர். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். புத்த,சமண மதமட்டுமின்றி,சைவ,வைணவப் பிரிவையும் நன்கு அறிந்தவர். இவர் சிவ பக்தர் போல தோன்றினாலும், இவர் உருவ வழிபாட்டை எதிர்க்கிறார்.

ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்றுநீர்
தேடுகின்ற பாவிகாள், தெளிந்தஒன்றை ஓர்கிலீர்;
காடுநாடு வீடுவீண் கலந்துநின்ற கள்வனை
நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே.

என கூறுவதன் மூலம், நமக்குள்ளே இருக்கிறான் எனத் தெளிவுப்படுத்த்துவதையும் நாம் சிந்திக்க வேண்டும். அவரே மீண்டும்
'நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்'
எனக் கூறுவதைப் பார்த்தால் உருவ வழிபாடு தேவையா எனக் கேள்வி எழுகிறது.
திருமூலரும் கூட 'மாசற்ற கொள்கை மனதிற் கொண்டால் ஈசனைக் காட்டும் உடம்பு' என்கிறார். தூய எண்ணம் கொண்டாலே போதும்.நற்சிந்தனை,நற்செயல் இவைதான் இறைவனைக் காண அடிப்படை தகுதி என்பது திண்ணம்.நம் எல்லோரும் மீதும் அன்பு கொள்ள வேண்டும் என்பதைத் தான் 'அன்பும் சிவனும் இரண்டென்பார் அறிவிலார்' என்றார்.

சரி, கடவுளுக்கு உருவமில்லை எனக் கொண்டால்,நம் எப்படி அவனைக் காண்பது,எப்படி பேசுவது என பல கேள்விகள் எழுப்புவதை விட, இப்படி பின்பற்ற சொன்னவர்கள் என்ன சொல்லுகிறார்கள் எனத் தேடுவோம்.
உருவ வழிபாடு தேவை இல்லை எனக் கருதும் இஸ்லாம் பக்கம் நம் பார்வையைக் கொஞ்சம் திருப்புவோம்.

பயணம் தொடரும்...

Tuesday, August 18, 2009

தேவை பாவை பார்வைநீ வரும் நேரத்திற்காக காத்திருக்கும் கணம்,
உன் வருகைக்காக காத்திருந்து கலவரப்படும் மனம்;
நீ வரும் வழி நோக்கி பூத்திருக்கும் என் விழி;
உன் வருகை தாமதமானதால் என்னுள் எழும் கோபம்,
நீ உரசி நடக்கையில் என்னுள் எழும் தாபம்;
எதை எதையோ உளறி கொட்டும் என் எண்ணம்
எல்லாம் கேட்டு சிவந்து நிற்கும் உன் கண்ணம்;
கிளம்பும் தருணத்தில் உடைந்து நிற்கும் என் உள்ளம்,
நாளையப் பொழுத்திற்காக தவமிருக்கும் இரவு,
முத்தம் நினைத்து நித்தம் ஒரு கவிதை....
என நானும் மகிழ்ந்திருப்பேன் எனக்கும்
ஒரு காதலி கிடைத்திருந்தால்!!!......


பி.கு
----
சத்ரியனால் மட்டும் எப்படி உருகி எழுதமுடிகிறது என சிந்தித்தேன்...