Saturday, July 25, 2009

மரம் தேடும் மழைத்துளி.






அமைதியாத்தான் போய்க்கொன்டிருந்தது வாழ்க்கை.கட்டுப்பாடற்ற நதியாய்,வேலியற்ற காற்றாய்.எதற்கும் கலங்கியதுமில்லை.கவலைப்பட நேரமும் இருந்ததில்லை.நேரத்துடன் உறங்கியதுமில்லை.பொழுதுடன் எழுந்ததுமில்லை.இப்படியா வாழ்கிறேன் என எண்ணியதுமில்லை. இவையெல்லாம் உன்னை காணூம் வரை.

இதுவரை தென்றலை நான் இப்படி ரசித்ததில்லை.காத்திருக்கும் நேரம் அதிகமானது ஆனாலும் சுகமானது.நீ வரும்வரை உன் நினைவுகள் என் துணை,வந்தபின்… எதுவும் எனக்கு நினைவில்லை.அதுவரை மெதுவாக போய்க் கொண்டிருந்த நேரம் உன்னுடன் இருக்கையில் அத்தனை வேகமாக நகரும்.வாழ்க்கையின் இன்பம் இதுவென எண்ணியிருந்தேன்.தூக்கம் மறந்தேன்,பசி மறந்தேன்.வாழ்த்து அட்டைக்கென கடைகடையாய் ஏறி இறங்கினேன்.உனக்கென பல கவிதை படித்தேன். எந்த கவிதையும் பிடிக்கவில்லை உன் பெயரைத் தவிர.உனக்கு மட்டும் எப்படி கவிதையாய் ஒரு பெயரென வியந்ததுண்டு.

மாற்றத்தை உணர்ந்தவர்கள் நண்பர்கள் என்பதால் கலவரப்படவில்லை.நம் காதலுக்கு தூபம் போட்ட நண்பர்கள்,உரமிட்டு,நீருற்றினார்கள்.என் தங்கையும் உணர்ந்தாள்,பிறகு அவளே எனக்கு தோழியுமானாள்.வீட்டிற்கு செய்தி கசியாமல் இருக்க,அவளையும் கவனிக்க வேண்டியிருந்தது.அப்படியும் செய்தி கசிய பெற்றோரை சமாதானப் படுத்த வேண்டியிருந்தது.அவர்கள் என்னை உணந்ததால்,உன்னையும் உணர்ந்து கொண்டார்கள். ஆனால்

உன் வீட்டிலோ உன்னை உணராததால்,என்னையும் உணரவில்லை,நம் காதலையும் உணரவில்லை.அணையிட்டு தடுத்தார்கள்,அன்பிலே நஞ்சிட்டார்கள்.உண்மை காதல் தோற்காது என்பார்கள்.உன்னால் அவர்களை தோற்கடிக்க இயலாமல்,நீ தோல்வி கண்டாய் நானோ துவண்டு விட்டேன்.இழப்பதற்கு மட்டுமல்ல,மறப்பதற்கும் தயாரானாய்.என்னிடம் துறப்பதற்கும்,இழப்பதற்கும் ஏதுமில்லை.இழந்து விட்டேன் என்னை,தந்து விட்டேன் உன்னிடம்.

அது ஏனோ தெரியவில்லை,இப்போதும் உன் பெயர் எனக்கு கவிதையாய் தெரிகிறது.


5 comments:

சத்ரியன் said...

//...உண்மை காதல் தோற்காது என்பார்கள்.உன்னால் அவர்களை தோற்கடிக்க இயலாமல்,நீ தோல்வி கண்டாய் ...//

உண்மையைப் போல் தெரிகிறது.வீட்டில் இதையெல்லாம் படிப்பதுண்டா?

நண்பரே, அருமையாக இருக்கிறது.இவ்வளவையும் ஒன்றாக எழுதியிருக்கின்றீர்கள்.

ஏதோ ஒரு தலைப்பிட்டு நான்கு நான்கு வரிகளாக ஒரு வாரத்திற்கு (தொடர்ச்சி எனக் குறிப்பிட்டு) எழுதியிருக்கலாம். இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.
(வாசகர்கள் கருத்துரையிட தமிழ் எழுதி இணைத்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.)

அரங்கப்பெருமாள் said...

நன்றி சத்ரியன்.இந்த கேள்வி வீட்டுல கேட்டாச்சு. கற்பனை அப்பிடின்னு சொன்னேன்(அட... உண்மைதாங்க...)

குரும்பையூர் மூர்த்தி said...

//இப்போதும் உன் பெயர் எனக்கு கவிதையாய் தெரிகிறது//
// கற்பனை அப்பிடின்னு சொன்னேன்/
நம்ப முடியவிலை

அரங்கப்பெருமாள் said...

எப்பிடித்தான் கண்டுபுடிக்கிறாங்களோ...

இரசிகை said...

//அது ஏனோ தெரியவில்லை,இப்போதும் உன் பெயர் எனக்கு கவிதையாய் தெரிகிறது//


sila unmaikal.........iruthi varai unmaiyaakave irunthuvidukintrana...unarvukalaip pola!!