Thursday, August 20, 2009

கடவுளைத் தேடி... பயணம் - 1



கேட்பதற்கு சற்றே வியப்பாக இருந்தாலும், 'தம் முயற்சி மெய் வருத்த கூலி தரும்' எனற பொய்யாமொழிப் புலவரின் நம்பிக்கைத் தரும் வார்த்தைகளை நம்புவோம்.
மகான்களும்,முனிவர்களும் செய்த முயற்சி இது.இந்தப் பாதையில் சற்று நடந்து விட்டு வரும் ஒரு ஆசை. இது ஏற்கனவே முயற்சித்தவர்களின் பாதை. இதுப் புதுப்பாதை அல்ல. அவர்களின் முயற்சி,பாடல்கள் என சிலவற்றை அலசிப் பார்க்கும் தொடர்.சிததர்கள்,யோகிகள்,புலவர்கள் முனிவர்கள் இவர்களின் பாதையைத் தெரிந்து கொள்ளும் முயற்சி.
யாரையும்,எந்த நம்பிக்கையையும் தகர்க்கும் முயற்சி அல்ல.கீதை,பைபிள்,குரான் ஏன் புத்தனையும் கேட்டுப் பார்ப்போம்.அவர்களின் வரலாற்றை ஆராயாமல்,அவர்களின் அறவுரைகளை மட்டும் தெரிந்து கொள்வோம்.நம் பாதை பல நேரங்களில் ஆத்திகப் பாதை,சில நேரங்களில் நாத்திகப் பாதை என மாறி மாறி வரக்கூடும்.அதற்கு காரணம் அந்த மகான்களே அன்றி,வேறு யாரும் காரணமல்ல.

முதலில் பார்ப்பது சிவவாக்கியார் எனும் சித்தர். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். புத்த,சமண மதமட்டுமின்றி,சைவ,வைணவப் பிரிவையும் நன்கு அறிந்தவர். இவர் சிவ பக்தர் போல தோன்றினாலும், இவர் உருவ வழிபாட்டை எதிர்க்கிறார்.

ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்றுநீர்
தேடுகின்ற பாவிகாள், தெளிந்தஒன்றை ஓர்கிலீர்;
காடுநாடு வீடுவீண் கலந்துநின்ற கள்வனை
நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே.

என கூறுவதன் மூலம், நமக்குள்ளே இருக்கிறான் எனத் தெளிவுப்படுத்த்துவதையும் நாம் சிந்திக்க வேண்டும். அவரே மீண்டும்
'நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்'
எனக் கூறுவதைப் பார்த்தால் உருவ வழிபாடு தேவையா எனக் கேள்வி எழுகிறது.
திருமூலரும் கூட 'மாசற்ற கொள்கை மனதிற் கொண்டால் ஈசனைக் காட்டும் உடம்பு' என்கிறார். தூய எண்ணம் கொண்டாலே போதும்.நற்சிந்தனை,நற்செயல் இவைதான் இறைவனைக் காண அடிப்படை தகுதி என்பது திண்ணம்.நம் எல்லோரும் மீதும் அன்பு கொள்ள வேண்டும் என்பதைத் தான் 'அன்பும் சிவனும் இரண்டென்பார் அறிவிலார்' என்றார்.

சரி, கடவுளுக்கு உருவமில்லை எனக் கொண்டால்,நம் எப்படி அவனைக் காண்பது,எப்படி பேசுவது என பல கேள்விகள் எழுப்புவதை விட, இப்படி பின்பற்ற சொன்னவர்கள் என்ன சொல்லுகிறார்கள் எனத் தேடுவோம்.
உருவ வழிபாடு தேவை இல்லை எனக் கருதும் இஸ்லாம் பக்கம் நம் பார்வையைக் கொஞ்சம் திருப்புவோம்.

பயணம் தொடரும்...

Tuesday, August 18, 2009

தேவை பாவை பார்வை



நீ வரும் நேரத்திற்காக காத்திருக்கும் கணம்,
உன் வருகைக்காக காத்திருந்து கலவரப்படும் மனம்;
நீ வரும் வழி நோக்கி பூத்திருக்கும் என் விழி;
உன் வருகை தாமதமானதால் என்னுள் எழும் கோபம்,
நீ உரசி நடக்கையில் என்னுள் எழும் தாபம்;
எதை எதையோ உளறி கொட்டும் என் எண்ணம்
எல்லாம் கேட்டு சிவந்து நிற்கும் உன் கண்ணம்;
கிளம்பும் தருணத்தில் உடைந்து நிற்கும் என் உள்ளம்,
நாளையப் பொழுத்திற்காக தவமிருக்கும் இரவு,
முத்தம் நினைத்து நித்தம் ஒரு கவிதை....
என நானும் மகிழ்ந்திருப்பேன் எனக்கும்
ஒரு காதலி கிடைத்திருந்தால்!!!......


பி.கு
----
சத்ரியனால் மட்டும் எப்படி உருகி எழுதமுடிகிறது என சிந்தித்தேன்...

Thursday, July 30, 2009

காதலிக்கு…

காத்திருப்பதை அறிந்து களிப்புரவில்லை

கசிந்துருக மனமிருந்தும் காலம்

கனியவில்லை

காத்திருப்பதும் எதிர்பார்த்துருப்பதும்

சுகமானதுதான்

விளைவுகள் சாதகமாகுமென்றால்.

ஒவ்வொரு விடியலிலும் சாதிப்பதைப் பற்றி

ஆயிரம் கனவுகள்

ஒவ்வொரு இரவிலும் சலிப்பான நினைவுகள்

மட்டுமே நிச்சயம்.

நொறுங்கிய நினைவுகள் நெருங்கி வரும்போது

தடுத்தாட் கொள்வது உன்

நினைவுகள் மட்டுமே

உணர்வுகளால் தாக்குன்டதால் வார்த்தைகளுக்கு

இங்கு பஞ்சம்

இதை உணர வேண்டும் உனது நெஞ்சம்.

Saturday, July 25, 2009

மரம் தேடும் மழைத்துளி.






அமைதியாத்தான் போய்க்கொன்டிருந்தது வாழ்க்கை.கட்டுப்பாடற்ற நதியாய்,வேலியற்ற காற்றாய்.எதற்கும் கலங்கியதுமில்லை.கவலைப்பட நேரமும் இருந்ததில்லை.நேரத்துடன் உறங்கியதுமில்லை.பொழுதுடன் எழுந்ததுமில்லை.இப்படியா வாழ்கிறேன் என எண்ணியதுமில்லை. இவையெல்லாம் உன்னை காணூம் வரை.

இதுவரை தென்றலை நான் இப்படி ரசித்ததில்லை.காத்திருக்கும் நேரம் அதிகமானது ஆனாலும் சுகமானது.நீ வரும்வரை உன் நினைவுகள் என் துணை,வந்தபின்… எதுவும் எனக்கு நினைவில்லை.அதுவரை மெதுவாக போய்க் கொண்டிருந்த நேரம் உன்னுடன் இருக்கையில் அத்தனை வேகமாக நகரும்.வாழ்க்கையின் இன்பம் இதுவென எண்ணியிருந்தேன்.தூக்கம் மறந்தேன்,பசி மறந்தேன்.வாழ்த்து அட்டைக்கென கடைகடையாய் ஏறி இறங்கினேன்.உனக்கென பல கவிதை படித்தேன். எந்த கவிதையும் பிடிக்கவில்லை உன் பெயரைத் தவிர.உனக்கு மட்டும் எப்படி கவிதையாய் ஒரு பெயரென வியந்ததுண்டு.

மாற்றத்தை உணர்ந்தவர்கள் நண்பர்கள் என்பதால் கலவரப்படவில்லை.நம் காதலுக்கு தூபம் போட்ட நண்பர்கள்,உரமிட்டு,நீருற்றினார்கள்.என் தங்கையும் உணர்ந்தாள்,பிறகு அவளே எனக்கு தோழியுமானாள்.வீட்டிற்கு செய்தி கசியாமல் இருக்க,அவளையும் கவனிக்க வேண்டியிருந்தது.அப்படியும் செய்தி கசிய பெற்றோரை சமாதானப் படுத்த வேண்டியிருந்தது.அவர்கள் என்னை உணந்ததால்,உன்னையும் உணர்ந்து கொண்டார்கள். ஆனால்

உன் வீட்டிலோ உன்னை உணராததால்,என்னையும் உணரவில்லை,நம் காதலையும் உணரவில்லை.அணையிட்டு தடுத்தார்கள்,அன்பிலே நஞ்சிட்டார்கள்.உண்மை காதல் தோற்காது என்பார்கள்.உன்னால் அவர்களை தோற்கடிக்க இயலாமல்,நீ தோல்வி கண்டாய் நானோ துவண்டு விட்டேன்.இழப்பதற்கு மட்டுமல்ல,மறப்பதற்கும் தயாரானாய்.என்னிடம் துறப்பதற்கும்,இழப்பதற்கும் ஏதுமில்லை.இழந்து விட்டேன் என்னை,தந்து விட்டேன் உன்னிடம்.

அது ஏனோ தெரியவில்லை,இப்போதும் உன் பெயர் எனக்கு கவிதையாய் தெரிகிறது.


நல்லா கெளப்புராய்ங்க பீதிய.......

எழுதி எனக்கு பழக்கம் இல்லை.நிறைய படிப்பேன்.எல்லாத்தையும் படிப்பேன். அதை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது உண்டு.பிறகு நாங்களே ஒரு பத்திரிக்கைப் போல ஆரம்பித்து,சில வாரங்களிலே நின்றும் போனது.ஆனால் படிப்பது மட்டும் தொடர்ந்தது.நான் எழுதுவது மிகவும் குறைவு. எனவே எப்போதாவது எழுதி,படித்த சிலவற்றை பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியதால்,இதை ஆரம்பிக்கிறேன்....

சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானிகளும் புத்தரோடு யேசுவும் உத்தமர் காந்தியும் எத்தனையோ உண்மைகளை எழுதி வச்சாங்க எல்லாந்தான் படிச்சீங்க என்னபண்ணி கிழிச்சீங்க என பட்டுக்கோட்டையார் கேட்டார். ஆமா..எல்லாருக்கும் அதையே நானும் சொன்னோம்ல...

முன்பு எழுதியதை மீள்பதிவு செய்து எழுத ஆரம்பிக்கிறேன்....